நயினார் நாகேந்திரன் 
தமிழ் நாடு

எங்கேயும் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை... அடித்துச் சொல்லும் நயினார் நாகேந்திரன்!

Staff Writer

சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது முழுக்க முழுக்க பொய் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோலிய துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டதோடு பிரதமர் மோடிக்கு உடனடியாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும், சென்னையில் உள்ள விடுதிகளில் டீ, காபி கிடையாது என்றும் சப்பாத்தி, தோசை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கலவை சாதங்கள் மட்டுமே வழங்கப்படும் என விடுதி உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது, சிலிண்டர் தட்டுப்பாட்டால்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “சிலிண்டர் தட்டப்பாடு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது முழுக்க முழுக்க பொய். சிலிண்டர் வேண்டும் என்றால் நான் தருகிறேன். நானே ஒரு கியாஸ் டீலர் தான். ஹோட்டல்களில் உணவு குறைந்ததற்கும் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருள்கள் குறைப்பு என்பதை எதிர்க்கட்சிகள் எழுதிப்போட்டு இருப்பார்கள். தட்டுப்பாடு எங்கேயும் இல்லை. ” என்றார்.