வருகிற சட்டமன்றத் தேர்தலில் நடிகரும் தவெக
தலைவருமான விஜய் சென்னையில் உள்ள 2 இரண்டு சட்டமன்ற தொகுதிகளைப் போட்டியிட பரிசீலித்து வருவதாகவும், இறுதியில் அவர் ஏதேனும் ஒரு தொகுதியை தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி, விருகம்பாக்கம் , விக்கிரவாண்டி, நாகப்பட்டினம், வேடச்சந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்ததாக கூறப்படுகிறது. வெற்றி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு ‘V’ எழுத்தில் தொடங்கும் வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஏதேனும் ஒரு தொகுதியை விஜய் உறுதிப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
இதில், வேளச்சேரி தொகுதி தவெக அலுவலகம் உள்ள பனையூருக்கு அருகில் உள்ளது. விருகம்பாக்கம் தொகுதியில் விஜய்யின் பெற்றோர்கள் வசித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் விருப்ப மனு கடந்த 6ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் மனுவை அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.