அன்புமணி சொல்லித்தான் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கினார்கள் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுகே வடுகம்பட்டி பகுதியில் பாமக எம்.எல்.ஏ. அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 20 க்கும் மேற்பட்ட கும்பல், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாமகவில் அன்புமணிக்கும், ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அருளின் கார் தாக்கப்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ”பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலளாரின் அப்பா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். துக்கம் விசாரிக்க நானும் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சென்றோம். அங்கிருந்து திரும்பி வரும்போது எங்களின் காரை வழிமறித்து ‘அன்புமணி வாழ்க’ என முழுக்கமிட்டு ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜே.பி. என்பவர் தான் இந்த தாக்குதலை நடத்தினார். சுமார் 20 பேருடன் கத்தி, இரும்பு பைப் கொண்டு தாக்குதல் நடத்தினர். காரை விட்டு கீழே இறங்கி இருந்தேன் என்றால் என்னைக் கொன்றிருப்பார்கள். எங்களுடன் வந்த 5 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
காவல் துறையினர் எங்களுடன் இருக்கும்போதே தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காவலர் ஒருவரும் காயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அன்புமணியின் ஆதரவாளர்கள்தான் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்புமணி சொல்லித்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களே சொல்லுகிறார்கள்.
அன்புமணிக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம், இளைஞர்களைத் தவறான முறையில் வழிநடத்தாதீர்கள் என்பதுதான். இத்துடன் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.