தொல்.திருமாவளவன் 
தமிழ் நாடு

மாநாடு முடிந்தவுடன் முதல்வர் விஜய்யை சந்தித்த திருமா!

Staff Writer

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், வி.சி.க.வின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்ற நிலையில், இன்று முதலமைச்சர் விஜய்யை வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

"வி.சி.க.வின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு முதல்வர் கூறிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்கவும், த.வெ.க.வின் வெற்றிகரமான 100 நாள் ஆட்சிக்கு வாழ்த்து தெரிவிக்கவும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தோம்.

மேலும், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகாலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு, எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதை உறுதியளிக்கவும் இந்த சந்திப்பு நடந்தது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்குதான் முதலிடம் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தீர்மானம் நிறைவேற்றியதற்கும், தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்திற்கும் வி.சி.க.வின் பாராட்டுகளை தெரிவித்தோம்.

தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கினோம். மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டு 125 தீர்மானங்களை வரையறுத்துள்ளோம்.

அதில் முக்கியமாக மாநில சுயாட்சியை த.வெ.க. அரசு வலுவாக முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

கூடுதலாக மேகமலை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும், கல்லூரி மாணவன் அமுதன் படுகொலை தொடர்பாக முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.

மேலும், போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப்படையை முதல்வரின் கூடுதல் கவனத்துடன் அமைக்க வேண்டும் என்று கூறினோம்.

த.வெ.க.வுடன் இணைந்து பயணிப்போம்." என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram