ராமதாஸ் - திருமாவளவன் 
தமிழ் நாடு

ராமதாசை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த திருமாவளவன்!

Staff Writer

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவரை தொடர்பு கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் நலம் விசாரித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்த நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, (திங்கட்கிழமை) கடந்த 6ஆம் தேதி அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதேபோன்று இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், ராமதாசை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு திருமாவளவன் நலம் விசாரித்தார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.

அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.” என தெரிவித்துள்ளார்.