திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆண்டுதோறும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடம் இதுவாக இருந்து வருகிறது.
ஆனால், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே இருக்கும் எல்லைக் கல் – நில அளவைத் தூணில்தான் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என ராம ரவிக்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து உத்தரவிட்டார்.
ஆனால், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகமோ, நேற்று 100 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்றிய இடத்திலேயே தீபம் ஏற்றியது. இதனையடுத்து உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை அப்போதே விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், CISF பாதுகாப்பு படையினர் மனுதாரர் உட்பட 10 பேர் தர்கா அருகே உள்ள எல்லைக் கல் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
இருப்பினும், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். அப்போது போலீசாருக்கும் தீபம் ஏற்ற முயன்றோருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் போலீசாரின் தடுப்புகளை அவர்கள் உடைத்தனர். இந்த மோதலில் போலீசாருக்கு மண்டையும் உடைந்தது.
அதேநேரத்தில், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தாவிடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது, அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவால் மத மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது- சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவாகி உள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கும் உள்நோக்கத்துடன் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற பாதுகாப்புக்கு CISF படையினரை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வரவழைத்த உத்தரவில் தவறு இல்லை. மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தனி வழக்காக விசாரிப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.