திருப்பரங்குன்றம் 
தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் வழக்கு... 3 தரப்பும் சொல்வது என்ன?

Staff Writer

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையிட்டார். மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்.

இதேபோன்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை நிறுத்திவைக்க கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் சார்பில் மதுரை கிளையில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பினர், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பேரிகாடுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்கப்பட்டு அவர்கள் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது.

உயர்நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்குவதே CISF -ன் பணி. அவர்களை எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை பாதுகாக்க அனுப்ப இயலும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.” என வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர். மேலும், “நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும்

கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதை உடனடியாக மாற்ற இயலுமா? எனவும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்வைக்கப்ட்ட வாதத்தில், 1862 ஆம் ஆண்டு முதல் தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 100 ஆண்டுகளாக தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை என்பதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே நீதுபதி சுவாமிநாதன் உத்தரவை அடுத்து அவசர அவசரமாக விளக்கு ஏற்ற முயன்றது ஏன்? வழக்கத்தில் உள்ள நடைமுறைக்கு எதிராக உள்ளது நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு என்று தெரிவித்தனர்.

கோவில் நிர்வாகத்தை தவிர்த்து விட்டு மனுதாரரை தீபம் ஏற்ற சொல்வது ஏற்றுக்கொள்ள இயலாது என தர்கா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து கோவில் நிர்வாகம் ஏற்ற வில்லை எனில் மாற்று வழியை யோசிக்கலாம். அதற்கு நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆண்டிற்கு ஒருமுறை சில மணி நேரம் தீபம் ஏற்றுவது எவ்வாறு சமூகப் பிரச்சனையை உருவாக்கும். பதட்டமான சூழலை உருவாக்கும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட சூழலில் எந்தவிதமான ஏற்பாடும் செய்யாமல் கோவில் நிர்வாகம் இருந்துள்ளது. எனவே தனி நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளார்? உத்தரவு நடைமுறைப்படுத்துவதற்காக சில மாற்று உத்தரவுகளை வழங்கி உள்ளார். ஆனால் அவர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.