சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த மேகதாது தீர்மானம் 
தமிழ் நாடு

மேகதாது அணை கூடவே கூடாது!- ஒன்றாக நின்ற கட்சிகள்...

Staff Writer

கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தியும் முதலமைச்சர் விஜய், இன்று சட்டமன்றப் பேரவையில்  கொண்டுவந்த தீர்மானம் அனைத்துக் கட்சியினராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மான விவரம்:

"காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து விட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசின் 4.3.2026 தேதியிட்ட கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம், 1956 பிரிவு 4-ன் கீழ், புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது."என்று அரசின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.