தமிழக மீனவர்கள் போராட்டம் 
தமிழ் நாடு

5 நாள்களுக்குள் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்... இல்லையென்றால் ?

Staff Writer

புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு விடுவித்த அரசாணையை 5 நாள்களுக்குள் ரத்து செய்ய வேண்டும் என்று பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள், அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

த.வெ.க. அரசு புதிய தலைமைச் செயலகம் கட்டடத்தை  ரூ. 1,200 கோடி செலவில், பட்டினப்பாக்கத்தில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலக கட்டடம் அமையவிருப்பதால், மீனவர்களின் பாரம்பரிய மீன்படி தொழில், வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள், அப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவர்களின் பூர்வீக நிலத்தில் குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் தெளிவான நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்று வலியுறுத்திய மீனவர்கள், கருப்புக்கொடியுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்னும் 5 நாள்களுக்குள் தமிழக அரசு அரசாணையை ரத்து செய்யவில்லையென்றால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram