விளைநிலங்களை விவசாயம் அல்லாத வேறு பயன்பாட்டு நிலமாக மாற்ற உள்ள விதிமுறைகளில், புதிய விதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது :
1) விளைநிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ள, ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கிரயம் அல்லது விற்பனைப் பத்திரம், வடிகால் வரைபடம், நில அமைப்பு வரைபடம், புறம்போக்கு நிலம் இல்லை என்பதற்கான சான்று, அடங்கல் சான்று, பட்டா நகல், தள வரைபடம், 500 மீட்டர் சுற்றளவு வரைபடம், சிட்டா நகல் ஆகிய 9 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
2) முன்மொழியப்பட்ட மனைப்பிரிவு வரைபடம், நில உட்பிரிவு வரைபடம் அல்லது கட்டட வரைபடம் ஆகியவற்றில் பொருந்தக்கூடிய வரைபடத்தையும் பதிவேற்ற வேண்டும்.
3) சம்பந்தப்பட்ட நிலத்தைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்குள் ஏற்கெனவே உள்ள அனைத்து மேம்பாடுகளையும் காட்டும் நில அமைப்பியல் வரைபடத்தையும் விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், நிலங்கள் தொடர்பான விண்ணப்பங்களை ஒற்றைச் சாளர இணையதளம் வாயிலாகப் பெறப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர், வேளாண்மைத் துறை இணை இயக்குநர், நீர்வளத் துறை செயற்பொறியாளர் ஆகியோரிடமிருந்து தடையின்மைச் சான்றிதழை இயக்குநர் பெற வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.