தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்காதது ஏன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் திருவிழாவான தீபாவளி வரும் நவம்பர் 8-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கு அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு முன்பணமும், போக்குவரத்துக் கழகங்கள், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு முன்பணத்துடன், மிகை ஊதியமும் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.
தீபாவளி திருநாளுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன் இவை வழங்கப்பட்டால் தான் அதைக் கொண்டு தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு புத்தாடைகளை வாங்கி தீபாவளிக்கு தயாராக முடியும்.
ஆனால், தீபாவளி திருநாளுக்கு இன்னும் 23 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அது குறித்த அறிவிப்புகள் எதுவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை.
அண்மைக் காலங்களில் தொழிற்சங்கங்களுடன் எந்த பேச்சும் நடத்தாமல் தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் ஆகியவற்றில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% மிகை ஊதியம், பிற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் நிதிநிலையை பொருத்து 8.33% முதல் 10% வரை மிகை ஊதியத்தை அரசு தன்னிச்சையாக அறிவித்து வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த 22 ஆண்டுகளாகவே அதிகபட்சமாக 20% மிகை ஊதியம் மட்டும் தான் வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 7,000 முதல் அதிகபட்சமாக ரூ. 16,800 மட்டுமே மிகை ஊதியமாக வழங்கப்படும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மிகை ஊதியத்தின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரி வருகின்றனர். ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவே இல்லை.
ஒரு குடும்பம் மிகவும் எளிமையாக தீபாவளி திருநாளைக் கொண்டாட வேண்டும் என்றால் கூட, அதற்கு குறைந்தபட்சம் ரூ. 25,000 தேவைப்படும். அதனால் தான் தீபாவளி திருநாளுக்கு 30%, அதாவது ரூ. 25,210 மிகை ஊதியமாக வழங்க வேண்டும்; இதை பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும், தற்காலிகப் பணியாளர்கள், நிரந்தரப் பணியாளர்கள் என அனைவருக்கும் முன்கூட்டியே வழங்க வேண்டும்.
தீபாவளி திருநாளுக்கு மிகைஊதியம் வழங்குவதைத் தவிர்க்க முடியாது எனும் நிலையில், அதை முன்கூட்டியே அறிவித்து வழங்குவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?
ரயில்வேயில் பணியாற்றும் 11.40 லட்சம் பணியாளர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தமிழக அரசு தாமதிக்கக் கூடாது.
எனவே, தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 30% தீபாவளி மிகை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
எந்தவித வேறுபாடும் இல்லாமல் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒரே அளவில் மிகை ஊதியத்தை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.