உச்சநீதிமன்றம் 
தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை!

Staff Writer

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்த்திகை தீபத் திருநாள் அன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனிநீதிபதியின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும், தீபத்தூணில் அணையா விளக்கு ஏற்றவும், திருப்பரங்குன்றம் மலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான மத்திய ரிசர்வ் காவல் படையை உடனடியாக பணியமர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்து தர்ம பரிஷித் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், வி.எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வு நேற்று நடத்தியது.

அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, "திருப்பரங்குன்றத்தின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்த எந்தவொரு நிலைபெற்ற நடவடிக்கையோ, பழக்கவழக்கமோ எக்காலத்திலும் இருந்ததில்லை.

ஆகம விதிகள், ஸ்தானிகர்கள் கருத்திற்கிணங்க கோவிலுக்கு மேலே உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே கடந்த 150ஆண்டுகாலமாக கோவில் நிர்வாகத்தால் கார்த்திகை தீபம் ஏற்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றினால், பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், இதற்குத் தடை விதித்து, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என்று வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram