பெலிக்ஸ் ஜெரால்டு 
தமிழ் நாடு

கரூர் சம்பவம்... வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது!

Staff Writer

கரூர் சம்பவத்தில் அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் பலர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைக்க, அந்த ஆணையமும் தமது விசாரணையை தொடங்கி உள்ளது. மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

ஆனால், கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும்,செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரப்பப்பட்டன.

இதையடுத்து, கரூர் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அதுபோலவே, இந்த சம்பவம் பற்றி பொதுவெளியியில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது.

அந்தவகையில், ஏற்கனவே சோஷியல் மீடியாவில் அவதூறு பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த சகாயம், தவெக நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கரூர் சம்பவம் குறித்து தன்னுடைய ரெட் பிலிக்ஸ் யூடியூப் சேனலில், அவதூறு பரப்பும் வகையியில் பேசியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலையில் 7.30 மணிக்கு, ஜெரால்டின் வீட்டிற்கே சென்று, அவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான பெலிக்ஸ் ஜெரால்டை, சென்னை காவல் ஆணையரகத்தில் வைத்து விசாரணையையும் தற்போது நடத்தி வருகிறார்கள்.