தமிழக மீனவர்கள்(மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

இராமேசுவரம் மீனவர்க்கு ரூ.6 லட்சம் அபராதம் - மாணிக்கம் தாகூர் கண்டனம்

Staff Writer

இராமேசுவரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 5.76 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை :

“சொந்தக் கடலில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைதுசெய்வதும் சிறையில் அடைத்து இலட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாக ஆகிவிட்டது.

கார்ப்பரேட் நண்பர்களின் வியாபார நலனுக்காக மட்டுமே ஓடி ஓடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நம் மீனவர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தைகூடப் பேச மறுப்பது ஏன்? ரஷ்யா - உக்ரைன் போரையே நிறுத்துவதாகப் பேசி நாடகம் ஆடும் மோடி, தன் சொந்த நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வதைக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? ஒருவேளை இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்?

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல இலட்சம் கோடிகளில் வரிவிலக்கு கொடுக்கும் இந்த பா.ஜ.க. அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த அநியாயக் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, நமது மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாகத் தாயகம் அழைத்துவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram