தூத்துக்குடி மாவட்ட மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் பட்ட மாணவராக மூன்றாம் ஆண்டு படித்துவந்த தினேஷ் எனும் இளம் மருத்துவர் திடீரென மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம், “ மருத்துவர் தினேசின் உடல், உடற்கூறு ஆய்விற்காக உட்படுத்தப்பட்டது. அவருடைய இறப்பிற்கான காரணங்களை தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கப் பிரதிநிதிகள் மூலமாகவும் மருத்துவ வல்லுநர்கள் மூலமாகவும் இச்சங்கம் முழுமையான பகுப்பாய்விற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களின் புறச் சூழல்கள் குறித்தும், இருப்பிடச் சூழ்நிலைகள் குறித்தும் ஆய்வுசெய்து விரிவான அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.
“சகோதரரின் இழப்பால் தாங்கொணா துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்களுடன் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறது.” என்றும் அச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.