குரூப் 1 முதல் நிலைத்தேர்வுக்கான அறிவிப்பை இன்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
துணை ஆட்சியர், உதவி ஆணையர், துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கம்), மாவட்ட பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உட்பட்ட 26 காலிப்பணியிடங்களை தனது அறிவிப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
இதுக்குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - I (தொகுதி I பணிகள்) -க்கான அறிவிப்பு, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள தேதியான இன்று (23.06.2026) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 30.06.2026 முதல் 29.07.2026 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி I பணிகள்) -க்கான முதல் நிலைத் தேர்வு 06.09.2026 அன்று நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.