ஆயுதங்களுடன் நிர்வாண அகோரிகள் திருப்பூரில் காரில் சுற்றித் திரிந்தநிலையில், அதை எதிர்த்து சிலர் கண்டன முழக்கமிட்டனர். இதனால் திருப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநில பதிவு எண் கொண்ட காரில் வாள்கள் உட்பட்ட ஆயுதங்களுடன் நிர்வாண அகோரிகள் பலர் திருப்பூரில் இன்று மதியம் கடைகளில் வசூலில் ஈடுபட்டனர். மரக்கடை ஒன்றுக்கு அவர்கள் நிர்வாணமாகச் சென்றபோது, அதைப் பற்றி தனக்குத் தெரிந்த அரசியல் அமைப்பினரிடம் தெரிவித்தார்.
தகவலறிந்து த.பெ.தி.க. அமைப்பினர் அங்கு செல்வதற்குள், அந்த அகோரிகள் கார் ஏறிச் சென்றுவிட்டனர். ஆனாலும் இவர்கள் அந்தக் காரைத் துரத்திச்சென்றனர்.
அப்போது, வேலம்பாளையத்தில் காரில் அகோரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் த.பெ.தி.க. அமைப்பினர், தமிழ்நாட்டில் நிர்வாண சாமியார்களுக்கு இடமில்லை என்றும் இங்கு இப்படி இருக்கக்கூடாது என்றும் கூறினர்.
உடனே கோபமடைந்த அந்த அகோரிகள் சத்தம் போட்டனர்.
பதிலுக்கு த.பெ.தி.க. அமைப்பினரும் முழக்கமிட்டதும் அந்த சாமியார்கள் காரை வேகமாக இயக்கிச் சென்றுவிட்டனர்.
மீண்டும் துரத்தல் தொடர, கார் வேகமாக காவிலிபாளையம் வழியாகச் சென்றுவிட்டது.
நிர்வாண அகோரிகளை திருப்பூர் பகுதியிலிருந்து மட்டுமல்ல தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றும் இனி திருப்பூர் பகுதிகளில் அந்த நிர்வாண அகோரிகளைப் பார்த்தால் எதிர்வினையாற்றுவோம் என்றும் த.பெ.தி.க. அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.