அன்புமணி ராமதாஸ் 
தமிழ் நாடு

ராமதாஸை சுற்றி துரோகிகள்… இவர் தான் முக்கியமானவர்..! – அன்புமணி விமர்சனம்!

Staff Writer

ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளதாகவும், அதில் முக்கியமான துரோகி ஜிகே மணி என்றும் அன்புமணி பேசியுள்ளார்.

பாமகவில் தந்தை, மகன் அதிகார போட்டியும் உச்சத்தில் உள்ளது. கட்சிக்கு உரிமை கோரி ராமதாஸ், அன்புமணி இருவரும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் இளைஞரணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், ராமதாஸை சுற்றி சில துரோகிகள் உள்ளனர். ராமதாஸிடம் பொய் பொய்யாகக் கூறி அவரது மனதை மாற்றுகின்றனர். பொய்யான தகவல்களைச் சொல்கின்றனர். நேற்று கூட மாம்பழம் சின்னம் நமக்குதான் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதைப் பற்றியும் ராமதாஸிடம் பொய்யாகத் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸை சுற்றியுள்ள துரோகிகளில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி. இதைப் பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது, பின்னர் கூறுகிறேன். இந்தக் கூட்டத்தில் அவரைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியை ஜி.கே.மணி இழந்துவிட்டார்.

நமக்குள் விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நமக்கு ஒரே எதிரி திமுகதான். சூழ்ச்சியினால் தான் இந்த குழப்பங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. நமக்குள் குழப்பத்தை திமுகவினர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இங்கேயும், அங்கேயும் கொழுத்திப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குழப்பம் ஏற்படுத்துவதில் திமுகவினர் பிஎச்டி படித்துள்ளனர். எப்படி குழப்பம் ஏற்படுத்த வேண்டும். யாரைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்துவது என்று செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், நம்முடைய ஒரே குறிக்கோள் திமுகவை வீழ்த்துவது தான்.” என்று கூறினார்.