அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
தமிழ் நாடு

ஆசிரியர் இடமாறுதல் அறிவிப்பு- தற்காலிக ஆசிரியர்களின் கதி என்ன?

Staff Writer

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களுடைய பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஜுன் 15 முதல் சமர்பிக்கலாம்.

இது தொடர்பான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளனர்.

நடப்பு 2026-2027 கல்வியாண்டின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு விண்ணப்பங்களை ஜுன் 15 முதல் ஜுன் 22 வரை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஆண்டில், தான் பணிபுரியும் பள்ளிகளில் ஓராண்டு நிறைவு செய்யாத ஆசிரியர்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலதாமதமான இந்த அறிவிப்பால், தற்காலிக ஆசிரியர்களின் பணியில் சிக்கல் ஏற்படும் என்று ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், பள்ளிகள் திறப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்தப்பட்டனர். அந்த இடங்களில் இடமாற்றப்படும் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அவர்களின் வேலை பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.