திருத்தணியில் பழங்குடியின கொத்தடிமைச் சிறுவன் சுரேஷ் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நான்கு மாதங்களுக்குப் பிறகே வெளியில் தெரியவந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி எம்.ஜி.ஆர்.நகர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40), முருக்கம்பட்டு கிராமத்தில் குத்தகை நிலத்தில் கூட்டுப்பண்ணை விவசாயம் செய்து வருகிறார். அவரது நண்பர் வினோத் மூலம், திருத்தணி தாமரைக்குளம் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தனிப்பெண் வெண்ணிலா (38) மற்றும் மகன்கள் சுரேஷ் (15), சூர்யா (7), தேவா (3) ஆகியோரை தன் பண்ணையிலேயே தங்க வைத்து கொத்தடிமைகளாக வேலை செய்ய வைத்துள்ளார்.
இந்நிலையில் 13.02.2026 அன்று சிறுவன் சுரேஷ் மேய்த்துக் கொண்டிருந்த 50 கோழிகளும், 2 ஆடுகளும் காணாமல் போனதாகக் கூறி, சாதியவாதி பாலமுருகன், அவரது மனைவி புவனா, மகள் காமாட்சி ஆகியோர் சுரேஷை தூணில் கட்டி வைத்து இரும்பு கம்பி, சுத்தியலால் சிறுவன் சுரேஷை அவனது தாயின் கண்ணெதிரே கடுமையாக தாக்கியுள்ளனர். இக்கொடூர தாக்குதலில் சிறுவன் சுரேஷ் உயிரிழந்தான். அவனது உடலை அதே பண்ணையிலேயே புதைத்து, அதன் மீது சிமெண்ட் தளம் போட்டு பூசியுள்ளனர்.
இச்செய்தியை வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதால் வெண்ணிலாவையும் அவரது இரு மகன்களையும் பாலமுருகன் அவரது பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளான். தன் மகனை இழந்து கடும் மன உளைச்சலுடன் அடைபட்டு கிடந்த வெண்ணிலா 4 மாதங்கள் கழித்து 10.6.2026 அன்று தப்பித்து வெளியே வந்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இக்கொடூரச் செயல் வெளியே தெரிய வந்துள்ளது.
இக்கொடூர வன்கொடுமையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
திருத்தணி காவல் நிலையத்தில் குற்ற எண் 0322 / 2026 ஆக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு பெண்கள் மீதான துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் பாலமுருகன், புவனா, காமாட்சி, வினோத் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வெண்ணிலா மற்றும் அவரது குழந்தைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.மோகனா, தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாட்ட செயலாளார் ஆர்.தமிழரசு மற்றும் ஏ.அந்தோணி, அப்துல் அகமது ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. உடனடியாக இச்சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் பிணையில் வெளிவரவிடாமல் வழக்கை நடத்தி கடும் தண்டனை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய தீர்வுதவி, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.