அஜிதா ஆக்னஸ் 
தமிழ் நாடு

தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி!

Staff Writer

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் தனக்கு தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் எனக் கூறி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை வழிமறிக்க முயன்றார். ஆனால் அதைக் கண்டு கொள்ளாத விஜய் தனது காரை தொடர்ந்து இயக்கச் செய்தார்.

இதையடுத்து விஜய் கார் கட்சியின் அலுவலகத்திற்குள் சென்றது. இதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து தவெக தலைமை அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தவெக நிர்வாகிகள் அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து அஜிதா ஆக்னஸ் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் 15 தூக்க மாத்திரை எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அஜிதா தற்போது தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

முன்னதாக தன் இறுதி மூச்சு வரை என் தாய் கழகமான தவெகவில், தலைவர் தளபதி விஜய் அவர்களோடும் மட்டும் தான் எனது அரசியல் பயணம் தொடரும் என அஜிதா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.