கர்நாடக அரசுக்கு, ஒன்றிய அரசு துணை போகிறதா? டெல்டா நிலங்கள் வறண்டு, விவசாயிகள் சாக வேண்டுமா என்று த.வா.க.தலைவர் வேல்முருகன் கேட்டுள்ளார்.
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
” காவிரி ஒழுங்காற்றுக் குழு (CWRC), தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி (cusecs) காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும், கர்நாடக முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று அறிவித்திருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை அமைப்புகளுக்கும், இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும் வெளிப்படையான சவாலாகும்.
இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
காவிரி என்பது கர்நாடகத்தின் தனிச் சொத்தல்ல. அது தமிழ்நாட்டின் வாழ்வாதார நதி. நீதிமன்றமும், சட்டமும், காவிரி நீர்ப் பங்கீட்டு திட்டமும் தமிழ்நாட்டின் உரிமையை ஏற்கும்போது, கர்நாடக அரசு மட்டும் அதை மறுப்பது அரசியல் ஆணவத்தின் உச்சக்கட்டமாகும்.
தமிழ்நாட்டின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் திட்டமிட்டு நெருக்கடிக்குள் தள்ளும் மோசமான செயலாகும். மேட்டூர் அணைக்கு உரிய அளவில் நீர் வராததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீருக்காக காத்திருக்கின்றன. காவிரி டெல்டா தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். அந்த நெற்களஞ்சியத்தை வறட்சிக்கு தள்ளுவது தமிழர்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமம்.
ஏற்கனவே இந்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூலை 22 வரை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய 31 டி.எம்.சி. நீருக்கு பதிலாக, தமிழ்நாட்டிற்கு சுமார் 3.5 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளதாக தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள குறைந்தபட்ச 3,500 கன அடி நீரைக்கூட திறக்க மறுப்பது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிக்கும் செயலாகும்.
ஒன்றிய அரசு இனியும் மௌனம் காக்க முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு, உச்சநீதிமன்றம் என அனைத்து சட்ட அமைப்புகளின் உத்தரவுகளையும் ஒரு மாநில அரசு தொடர்ந்து புறக்கணிக்கும் போது, அதைத் தடுக்கத் தவறும் ஒன்றிய அரசும் இந்த அநீதிக்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக அரசு வெறும் கண்டன அறிக்கைகளிலும், கடித அரசியலிலும் நிற்காமல், உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தை கோர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடுக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து காவிரி உரிமைக்கான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.