பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதி 
தமிழ் நாடு

பரந்தூரில் சிப்காட் அமைப்பதா?- த.வா.க. வேல்முருகன் எதிர்ப்பு

Staff Writer

பரந்தூர் விமான நிலையத்திற்கு பதில் சிப்காட் அமைக்க முயன்றால் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அக்கட்சியின்தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ளார். 

”பயிர்க் கடன் தள்ளுபடியில் தமிழ்நாடு முதல்வரால் ஏமாற்றப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதில் சிப்காட் அமைக்க அரசு முனைந்தால், அதனை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு வீச்சில் களத்தில் நிற்கும்!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்குட்பட்ட பரந்தூரில் ரூ.34,000 கோடி செலவில் பசுமை வெளி (Greenfield) விமான நிலையத்தை 2030-ம் ஆண்டுக்குள் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக பரந்தூர், வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார் பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலிபாடி, மகாதேவிமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில் அரசு வசம் உள்ள 1,972 ஏக்கர் புறம்போக்கு நிலமும், தனிநபர்கள் வசம் உள்ள 3,774 ஏக்கர் நிலமும் அடங்கும்.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை அனுமதியுடன், தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1997ன் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.1,822.45 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டப் பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) மேற்கொண்டு வருகிறது.

இதற்கான அரசாணை 2023 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக 326 அதிகாரிகள் (சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு துணை ஆட்சியர்கள், சிறப்பு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் விவசாயப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் வேகம் பெற்றது. மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படவில்லை.

விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் உள்ள நிலங்களை யாருக்கும் விற்க முடியாதபடி பத்திரப் பதிவு முடக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதலும் செய்ய முடியாத நிலை உள்ளது.

2025 ஜனவரி 19 அன்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை விமான நிலையத்தின் நெரிசலைச் சுட்டிக்காட்டி, பரந்தூர் விமான நிலையத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். மறுநாள் (ஜனவரி 20) முதல்வர் விஜய், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பேசினார்.

பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக முதல்வர் விஜய்யை சந்திக்க விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் விஜய் இத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில், கையகப்படுத்தப்பட்ட சுமார் 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய ஆணைய அதிகாரிகள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதன் அவசியம் குறித்த ஆய்வறிக்கையை முதல்வர் விஜய்யிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

பரந்தூரில் விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என விவசாயிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.” என்று வேல்முருகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.