விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சாடியுள்ளார்.
இதுகுறித்த அவரின் இன்றைய அறிக்கை :
”மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் என அனைத்தையும் அந்நிய நாடுகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் திட்டமிட்டுத் தாரைவார்க்கும் தேச விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது.
'மேக் இன் இந்தியா' எனப் பொய் முழக்கமிட்டுக் கொண்டே, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நாட்டின் நிலக்கரி, மின்சாரம், இரயில்வே உள்ளிட்ட முக்கியத் துறைகளை தனியார் மயமாக்கி சீரழித்த இந்த அரசு, இப்போது இந்திய விவசாயத்தின் மரணச் சாசனமாக அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்காவின் இலாபத்திற்காக, நம் நாட்டுச் சந்தையில் அந்நிய நாட்டுப் பால் பொருட்கள், சோளம் மற்றும் எண்ணெய் வித்துக்களை மலிவாக இறக்குமதி செய்ய வழிவகை செய்வது, மண்ணையே நம்பி வாழும் இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வஞ்சகமான செயலாகும்.
தில்லி எல்லையில் ஓராண்டு காலம் கடும் குளிரிலும் மழையிலும், நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளோடு போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத ஒன்றிய அரசு, அமெரிக்க அதிபரின் வர்த்தக நலன்களுக்காக இந்திய உழவர்களைப் பலிகொடுக்கத் துணிந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒட்டுமொத்த 140 கோடி மக்களும், இந்தியப் பெருநிலமும், அந்நிய நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி வருவதையும், நம் நாட்டின் வளங்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்படுவதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் வேடிக்கைப் பார்க்காது. மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை மீட்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற இருக்கும் விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்தை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமனதோடு ஆதரிக்கிறது.” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.