கூடங்குளம் போராட்டம் 
தமிழ் நாடு

கூடங்குளம் மக்களை எவ்வளவு காலத்துக்கு குற்றவாளிகளாக நடத்தப் போகிறீர்கள்?

Staff Writer

கூடங்குளம் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களை இன்னும் எவ்வளவு காலத்துக்குதான் குற்றவாளிகளாக நடத்தப்போகிறீர்கள் என்று த.வா.க. தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”கூடங்குளம் பகுதியில் வாழும் மீனவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது மண்ணின் பாதுகாப்பிற்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் நலனுக்காகவும் முன்னெடுத்த மக்கள் எழுச்சியின் காயங்கள் இன்னும் ஆறாமல் இருக்கின்றன.

ஒரு போராட்டம் முடிந்திருக்கலாம். ஆனால் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மக்களின் வாழ்க்கையைத் துரத்திக்கொண்டிருக்கும் துன்பங்கள் முடிவடையவில்லை.

ஆண்டுகள் பல கடந்த பின்னரும், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மேல் சட்டச் சுமைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கின்றன

வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்வாதாரம் தேடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. குடும்பங்களின் பொருளாதாரம் சிதைந்துள்ளது. மனவேதனையும், எதிர்காலம் குறித்த அச்சமும் இன்னும் அகலவில்லை.

ஒரு சனநாயக நாட்டில் மக்களின் குரல் ஒலிப்பது குற்றமல்ல. தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர்கள் சமூக விரோதிகளும் அல்ல. ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள், காலம் கடந்தும் நீடிப்பது நீதியின் மீதான நம்பிக்கையையே சோதனைக்கு உட்படுத்துகிறது.

சட்டமன்றத் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கூடங்குளம் மக்கள் ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கின்றனர். சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது எஞ்சியுள்ள 46-க்கும் மேற்பட்ட வழக்குகள், பல குடும்பங்களின் நிம்மதியைப் பறித்துக்கொண்டே இருக்கின்றன.

இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதில் என்ன தடைகள் உள்ளன?

தமிழக அரசின் விருப்பமின்மையா?

ஒன்றிய அரசின் அழுத்தங்களா? அல்லது வேறு நிர்வாகச் சிக்கல்களா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

எனவே, கூடங்குளம் மக்களின் நீண்டகால துயரத்திற்கும் மனவேதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தோழர் சுப. உதயகுமாரன் உட்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது எஞ்சியுள்ள, அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்.” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.