நாகை புத்தூரில் த.வெ.க. விஜய் 
தமிழ் நாடு

நாகையில் பல ‘இல்லை’கள்- நடிகர் விஜய் அடுக்கிய புகார்கள்!

Staff Writer

நாகை மாவட்டத்தில் பல குறைபாடுகள் இருப்பதாக இன்று அங்கு பிரச்சாரம் செய்த நடிகர் விஜய் குற்றஞ்சாட்டினார். 

நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை அருகில் இன்று முற்பகல் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,  வழக்கம்போல அவர் அந்த இடத்துக்கு வந்துசேரவே தாமதம் ஆனது.

முற்பகல் 11.30 மணிக்கு அவர் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 12.30க்குப் பேசுவார் என மாற்றப்பட்டது. அரை மணிக்குள் அவர் பேசி முடிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

இந்தப் பின்னணியில் மதியம் 1.30 மணியளவில்தான் விஜய் அங்கு வந்து பேசத் தொடங்கினார். சுமார் இருபது நிமிடங்களுக்குள் அவர் தன் பேச்சை முடித்துக்கொண்டார். 

அண்ணா சிலை அருகில் தன் பேருந்தை நிறுத்தியிருந்த அவர், அண்ணாவுக்கு முதலிலும் பிறகு பெரியாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு பேச்சை ஆரம்பித்தார். 

உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றி அவர் காகிதத்தில் எழுதி வைத்திருந்த குறிப்புகளைப் பார்த்து வரிசையாகக் கேட்டார். 

மாவட்டத்தில் கடலியல் கல்லூரி அமைக்கவில்லை என்றும் நாகூர் ஆண்டவர் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கக்கூட மருத்துவர் இல்லை என்றும் அவர் குறைகூறினார். 

மீனவர் கொலைகளுக்கு கடிதம் மட்டும் எழுதிவிட்டு கபடநாடகம் ஆடுவதாக மாநில அரசைச் சாடினார். 

நாகை புதிய பேருந்துநிலையம் சுத்தமாக இல்லை என்றும் ரயில் நிலைய வேலைகள் தாமதமாக நடக்கின்றன என்றும் அவர் கூறினார்.

வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தினால் என்ன குறைந்தாபோய்விடுவீர்கள் என்றும் அவர் கேட்டார்.

தன்னுடைய பிரச்சாரத்தின்போது பல இடங்களில் மின் தடை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், பிரதமரோ உள்துறை அமைச்சரோ ஆர்எஸ்எஸ் தலைவரோ வந்தால் இப்படித்தான் செய்வீர்களா... செய்துதான் பாருங்களேன் என்றும் பேசினார்.

தனக்குப் பேசுவதற்கு பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் இப்படிச் செய்தால் தான் எதைத்தான் பேசுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அங்கிருந்து அவர் திருவாரூருக்குப் புறப்பட்டார்.

வெளிநாட்டு முதலீடா வெளிநாட்டில் முதலீடா என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி எழுப்பினார்.