சட்டப்பேரவை 
தமிழ் நாடு

உ.வே.சா. பிறந்தநாள்- சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு!

Staff Writer

தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. 

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி இதுதொடர்பாகக் கோரிக்கையை வைத்தார். 

அதை ஏற்றுக்கொண்டு உறுதியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டுமென்று அவர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அவருடைய கோரிக்கையை ஏற்று, நிச்சயமாக வரக்கூடிய காலகட்டங்களில் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களின் பிறந்தநாள், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்.” என்று அறிவிப்பைச் செய்தார்.

இதைக் கேட்டு உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

உடனே, “அதேநேரத்தில், இன்று நம்முடைய துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றும் முதலமைச்சர் கூறியதும், அவையில் புன்முறுவலுடன் உறுப்பினர்கள் வாழ்த்துக் கரவொலி எழுப்பினர்.