தேர்தலுக்கு முந்தி பகையாளி ஆனா இப்ப பங்காளி என்பது போன்ற ஒரு தோற்றத்தை தவெகவும் திமுகவும் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ‘நானும் விஜய்யும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் ‘ என்று அடுத்த ஒரு நண்பேண்டா காட்சியை சட்டசபை பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார் உதயநிதி எம்.எல்.ஏ.
நல்ல விசயம் தானே என்கிறீர்களா ?
ஒரே கல்லூரியில் என்பது ஓ.கே. ஆனால் படித்தவர்கள் என்பது கொஞ்சம் உதைக்கிறதே என்பதுதான் மேட்டர்.
விஜய்யும் உதயநிதியும் ஒன்றாகப் படித்தது சென்னை லயோலா கல்லூரியில் என்பது சகலரும் அறிந்த சங்கதி. இதன் தொடர்ச்சிதான் சுவாரசியமானது.
மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. அப்படி ஒதுங்கநேர்ந்தபோதும் மழையையே பார்த்துக்கொண்டிருந்தேன் என்பது மண்ணின் மணம் மணக்க எழுதிய நைனா கி.ராஜநாராயணனின் புகழ்பெற்ற வாக்கு மூலம்.
இந்த வாக்கு மூலம் முன்னாள் துணை முதல்வர், இந்நாள் முதல்வர் விஜய் இருவருக்குமே மிகவும் பொருந்தும் என்பதே சுவாரசியம். கல்லூரிக்கு விருப்பப்படும் நேரங்களில் விசிட் அடிக்கும் இருவருமே கிளாஸை கட் அடிப்பதில் கில்லாடிகள் என்பதை பல பேட்டிகளில் அவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தனது மகன் விஜய், வகுப்புக்கு ஒழுங்காகப் போகாமல், கல்லூரி காம்பவுண்ட் சுவரில் ஜாலியாக அரட்டை அடித்து வீடு திரும்பிய கதைகளை நகைச்சுவை பொங்க பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
காலேஜுக்குக் கட் அடித்தவர்கள் சட்டசபைக்கு சின்சியராக ஆஜராவார்கள் என்று நம்புவோம்.