விவசாய நிலம் 
தமிழ் நாடு

விவசாயிகளுக்கான முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?- உதயநிதி

Staff Writer

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் எப்போது அறிவிக்கப்போகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

"முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளைக் கடன்தொகைவாரியாகப் பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள்.

அதனை எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன. இந்தச் சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று அமைச்சர்கள் கூறினார்கள்.

இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும்போது, மறுபடியும் சொற்பத் தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர்.

பண்டிகையைக்கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாகக் கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள்.

காவிரியில் முறையாக தண்ணீரைத் திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது. அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசியபோது, ‘ஏற்கெனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என நம்பிக்கையாகப் பொய்சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்?

இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த அரசு ரத்துசெய்ய வேண்டும்." என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram