தமிழ் நாடு

மைய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

Staff Writer

மைய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு, தனது அறிக்கையின் முதல் பாகத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது.

இக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் 15 அன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. இந்திய உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் இக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே. அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு திட்டக் குழுவின் மேனாள் துணைத் தலைவர் டாக்டர் மு. நாகநாதன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

நடுநிலையான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் நான்காவது முக்கியமான ஆய்வு ஆகும்.

முன்னர் ராஜமன்னார் குழு (1969-71) வழியாக இதுதொடர்பான உரையாடலை முன்னெடுத்த தமிழ்நாட்டின் இரண்டாவது முயற்சி இது ஆகும். தேசிய அளவில், சர்க்காரியா ஆணையம் (1983-88) மற்றும் பூஞ்சி ஆணையம் (2007-10) ஆகியவை ஒன்றிய-மாநில உறவுகளை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

அந்த ஆய்வுகளுக்குப் பிறகான காலத்தில் நடைபெற்ற அரசமைப்பு, நிதி, மற்றும் நிறுவன அளவிலான வளர்ச்சி மாற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு புதிய மற்றும் விரிவான ஆய்வின் அவசியம் உணரப்பட்டது.

”ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையின் முதல் பாகம், பத்து இயல்களைக் கொண்டுள்ளது:

  1. அதிகாரப் பரவலாக்கத்திற்கும் மாநில சுயாட்சிக்குமான வாதம்

  2. அரசமைப்புச் சட்டத் திருத்தம்

  3. மாநிலங்களின் ஆட்சிநில ஒருமைப்பாடு

  4. மொழி

  5. ஆளுநர்

  6. தொகுதி மறுவரையறை

  7. தேர்தல்கள்

  8. கல்வி

  9. சுகாதாரம்

  10. சரக்கு மற்றும் சேவை வரி

இக்காலத்தில் கூட்டாட்சி முறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ள இந்த அறிக்கை, அரசமைப்புச் சட்டத்தின் வரம்பிற்கு உட்பட்டு கூட்டாட்சி முறையின் சமநிலையை மீட்டெடுக்கவும், உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் உறுதியான மற்றும் திட்டவட்டமான பரிந்துரைகளை முன்வைக்கிறது. முறையே பத்து இயல்களைக் கொண்ட மேலும் இரண்டு பாகங்கள் இப்போது தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சியின் ஒரு சிறப்பம்சமாக, அறிக்கையின் தமிழ்ப் பதிப்பிற்கு 'திறந்தநிலை அணுகல்' (Open Access) வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முதல்முறை ஆகும். அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழ் பதிப்பு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும். எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ, அதிகாரப்பூர்வ PDF கோப்பிலிருந்து தமிழ் பதிப்பை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அச்சிடவோ, மறுபதிப்பு செய்யவோ அல்லது விநியோகிக்கவோ முடியும். இதற்கு மூலாதாரத்தை முறையாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பது நிபந்தனை ஆகும். அறிக்கையின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை பரவலாகக் கொண்டு செல்வதையும், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த பொது விவாதத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரந்த அளவில் தேசிய ஈடுபாடு உருவாவதை எளிதாக்கும் வகையில், அறிக்கையின் முதல் பாகத்தை இந்தி, வங்காளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா, பஞ்சாபி மற்றும் அஸ்ஸாமி ஆகிய முக்கியமான இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த மொழிபெயர்ப்புகள் இறுதி செய்யப்பட்டவுடன் அவற்றுக்கும் 'திறந்தநிலை அணுகல்' வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை சமர்ப்பிப்பு, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் பரிணாம வளர்ச்சியில் தமிழ்நாட்டின் தொடர்ச்சியான பங்களிப்பில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். இதன் நோக்கம் ஒன்றிய அரசை பலவீனப்படுத்துவது அல்ல. மாறாக ஒன்றிய அதிகாரத்தை முறைப்படுத்துவது ஆகும். இதன் மூலம் ஒன்றிய அரசு தேசிய அளவிலான பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியும். அதே நேரத்தில் மாநிலங்களுக்குத் தேவையான சுயாட்சியை மீட்டளிப்பதன் மூலம் சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்ய முடியும். மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செய்யக்கூடிய பணிகளில் ஒன்றியம் தனது ஆற்றலைச் சிதறவிடுவது, அது மட்டுமே தீர்க்கக்கூடிய பெரிய தேசிய சவால்களிலிருந்து திசைதிருப்ப வாய்ப்புள்ளது. இந்த அறிக்கை ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தூண்டி, சீரான மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சி முறைக்கு வழிவகுக்கும் என்று தமிழ்நாடு அரசு நம்புகிறது.” என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.