கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி பிரதான தேர்வில் நாடு முழுவதும் 2,736 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை 2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வின் முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றது. அதன் முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் இந்தாண்டு 2,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அடுத்த கட்டமாக நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் 136 பேர் பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 155 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 13.97 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் பயின்ற 85 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழக அரசின் பயிற்சி மையங்களில் பயின்ற 48 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 85 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இந்தாண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களில், 54.84% பேர் மாநில அரசின் பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், இது கடந்தாண்டு 35.29% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.