எம்.பி.பி.எஸ். 
தமிழ் நாடு

இறுதிக்கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் 824 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி!

Staff Writer

தமிழக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப்பக்கத்தில் அவர் கூறியள்ளதாவது:

"நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றும், தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் வானளாவிய கல்விக் கட்டணக் கொள்ளையால் இறுதிக்கட்ட கலந்தாய்விலும் 836 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கின்றன.

இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 14 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 824 இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ரூ. 23 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்து, ஒட்டுமொத்தப் படிப்பிற்கு ரூ. 1.5 கோடி வரை செலவாகும் நிலையை உருவாக்கி மருத்துவக் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கியுள்ளனர்.

கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, குறைந்த மதிப்பெண் எடுத்த வசதி படைத்தவர்களுக்கு இடங்கள் செல்லும் சமூக அநீதி அரங்கேறியுள்ளது.

காலியாக உள்ள இந்த 836 இடங்களும் சுயநிதித் தகுதிப் பிரிவு இடங்களே தவிர, என்.ஆர்.ஐ. அல்லது சிறுபான்மை இடங்கள் அல்ல.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு எந்தவித உச்சவரம்பும் நிர்ணயிக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ​ஒன்றிய சுகாதாரத் துறை உடனடியாகத் தலையிட்டு கூடுதல் சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டும்; கட்டணத்தை முறைப்படுத்தி முறைசாரா முறையில் வீணாகும் இந்த மருத்துவ இடங்களை உரிய தகுதியுடைய ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்களுக்கு உடனே வழங்க வேண்டும்." என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram