வைகோ 
தமிழ் நாடு

கட்சியினரின் ஆதங்கத்தையே துரை வைகோ சொன்னார்- வைகோ

Staff Writer

தனிச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம் என துரை வைகோ சொன்னது ம.தி.மு.க.வினரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

சென்னையில் இன்று காவிரிப் பிரச்னை தொடர்பாக அக்கட்சி ஒருங்கிணைத்த போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் திருச்சியில் துரை வைகோ கூறியதைப் பற்றி கருத்து கேட்டதற்கு, இவ்வாறு பதில் அளித்தார்.   

தான் தி.மு.க. போட்டியிட்ட 34 தொகுதிகளில் பிரச்சாரம் செய்த நிலையில், 24 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது என்றும் வைகோ கூறினார். அதன் வெற்றியில் தன்னுடைய பங்கு சிறிதளவாவது உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

”கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கெல்லாம் அதிக இடங்கள் வழங்கிவிட்டு, எங்களுக்கு நான்கே இடங்கள்தான்; அது எங்கள் கட்சியினர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்திவிட்டது; தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விகிதம், தி.மு.க.வின் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்ற நிர்பந்தம், ஒரே தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டி எனக் கூறிவிட்டு 24 மணி நேரத்தில் அதையும் மாற்றி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம்... அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை... இதுவே நாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் என்கிற எண்ணம்... காங்கிரஸ், தே.மு.தி.க., கம்யுனிஸ்ட் கட்சிகள் எல்லாம் தனிச்சின்னத்தில் போட்டியிட்டார்கள். அதைப் போல நாங்களும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம் என்கிற கட்சியின் தொண்டர்களின் ஆதங்கத்தையே துரை வைகோ வெளிப்படுத்தினார். கட்சியின் எதிர்காலம் குறித்து பொதுக்குழுவில் கூடி முடிவெடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி தீர்மானிப்போம்.” என்றும் வைகோ விளக்கமாகக் கூறினார்.