ஈரானில் தவிக்கும் மீனவர்கள் 
தமிழ் நாடு

ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 தமிழக மீனவர்கள்!

Staff Writer

குமரி மாவட்டம் கடியப்பட்டணம், குளச்சல், இணையம், முட்டம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மீனவர்கள் ஈரானில் பணியாற்றி வருகின்றனர்; மேலும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் ஈரானில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

”குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த பாபின் செசாரியோ, சத்ய ர°மான் ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் "சகோதரர்கள் அஸ்வின் ரஞ்சித் குமார், சகாய ஜெனிஷ்ராஜ் ஆகியோர் ஈரான் மீன்பிடி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் பணிக்குச் சென்றனர்.

தற்போது அமெரிக்கா, இ°ரேல் நாடுகள் ஈரான் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால் ஈரானில் எங்கள் சகோதரர்கள் பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கின்றனர். குண்டு மழை பொழிவதாகவும், உணவுகூட கிடைக்காமல் தவிப்பதாகவும் தெரிவித்தனர்.

ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக அழைத்துவர உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மார்ச் 11ஆம் தேதி நீதியரசர் பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில், ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தூதரகத்தை தொடர்பு கொள்வதற்காக தெலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியர்களை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் இதுவரையில் ஒன்றிய அரசு அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஈரான் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இடையிலான உக்கரமான போர் பகுதியில் சிக்கித் தவிக்கும் 700-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடி விசைப்படகுகளில் கடந்த மூன்று வார காலமாக முடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மீனவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள காணொளியில், எந்த நேரத்தில் உயிர் பறி போகுமோ என்று குண்டு வீச்சுக்கு இடையில், உணவு தண்ணீர் இன்றி விசைப்படகுகளில் தங்கி உள்ளோம் என்று அச்சத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே ஒன்றிய அரசு தமிழ்நாடு மீனவர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று வைகோ தன் அறிக்கையில் கூறியுள்ளார்.