தமிழ் நாடு

'உலக அழகிகளை உருவாக்கிய இந்தியா உலகக் கவிகளை உருவாக்கவில்லையா?'- வைரமுத்து

Staff Writer

கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளான இன்று, இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்றுள்ளார். டெல்லியில் நடந்த விழாவில் டாக்டர் கரண்சிங் இந்த விருதை வைரமுத்துவுக்கு வழங்கினார்.

ஏற்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து, உலக அளவில் நோபல் பரிசானது இந்தியக் கவி ஒருவருக்கு வழங்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலக அழகிகளைத் தயாரித்த இந்திய உலகக் கவிகளைத் தயாரிக்க வில்லையா? என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இலக்கியத்துக்காக தனி பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

'நிழல்கள்' எனும் திரைப்படத்தில் 'பொன்மாலைப் பொழுது' என்னும் பாடல் மூலம் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கியவர் வைரமுத்து.

சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.

கலைமாமணி விருது, தனது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலுக்கான சாகித்ய அகாதெமி விருது, பத்ம பூசன் விருது, ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தற்போது 2025ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு அகிலன், 2002ஆம் ஆண்டு ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு பிறகு ஞானபீட விருது பெறும் 3ஆவது தமிழர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார்.

ஜூலை 13ஆம் தேதியான இன்று, இவருடைய பிறந்தநாளில் ஞானபீட விருது பெறும் இவர், சமூகஊடகத்தில் நேற்று பதிவிட்டதாவது, " நாளை என் பிறந்தநாளில் சென்னையில் இல்லை; டெல்லி செல்கிறேன் ஞானபீட விருதினைப் பிறந்தநாளில் பெறும் பெரும்பேறு வாய்த்திருக்கிறது.

எங்கிருந்தாலும் என்னை ஒருகணம் நினைவு கூருங்கள்; நாடும் மொழியும் நலமுற வாழ்த்துங்கள்.

இந்த 73 வயதில் என்ன தோன்றுகிறது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டும் :

பொன்னும் பொருளும் மண்ணும் பதவியும் நிலைபெறுவதில்லை

செலுத்தும் அன்பும் செய்யும் அறமுமே நிலைபெறுகின்றன

என் வாழ்வு அன்பின் வழியது;

எழுத்து அறத்தினும் வலியது.

இரண்டையும் போற்றுகிறேன்

அன்பு செலுத்துக; அறம் செய்க; வாழ்வாங்கு வாழ்க!" என்று கூறி இருந்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstag

ram