குற்றஞ்சாட்டப்பட்ட ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் 
தமிழ் நாடு

வன்கொடுமைப் புகாரில் ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்!

Staff Writer

மதுரை மாவட்டம் மேலூரில் தீண்டாமைக் கொடுமை செய்து பட்டியலின ஊராட்சி பணியாளரின் தற்கொலை முயற்சிக்குக் காரணமான ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தூய்மைப் பணியாளராக கடந்த எட்டு வருடங்களாகப் பணியாற்றி வருகிறார் சசிகலா. இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், பணியிடத்தில் தமக்கு தீண்டாமை, சாதியக் கொடுமைகள் நடைபெற்றுவருவதாக புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், புகாரை வாபஸ் பெறும்படி இவருக்கு பல்வேறு வகையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சசிகலா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சசிகலாவின் கணவர் தெரிவித்தார்.

மேலும், கவலைக்கிடமான நிலையில் மேலூர் அரசு மருத்துவமனையில் சசிகலா சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதைதொடர்ந்து, இந்த வன்கொடுமை புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை தெரவித்துள்ளது.

இதுகுறித்து சமூக நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

"சாதி பாகுபாடுடன் தாம் நடத்தப்படுவதாக ஊராட்சி செயலாளர் மீது தூய்மை பணியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், நமது துறையின் அறிவுறுத்தலின்பேரில் ஊராட்சி செயலாளர் இன்று (07.09.26) பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய காலங்கள் போல் அல்லாமல், சாதி பாகுபாடுகளை எந்த வகையிலும் அனுமதிக்காமல், நமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram