புதுச்சேரியில் 3 தொகுதிகளை விசிக கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெற்ற நிலையில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “இது வழக்கமான தேர்தல் அல்ல. வலதுசாரி சக்திகளை காலூன்ற விடக் கூடாது. மதச்சார்பற்ற சக்திகளை 100 சதவீத இடம் பிடிக்க வேண்டும்.
இந்த கூட்டணியில் விசிக ஓர் அங்கம் என்ற உரிமையோடு, எங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். திமுக உடன் பேரம் பேசுகிற கட்சியாக நாங்கள் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஏனெனில் இது தமிழகத்திற்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றியாக இருக்கும். எங்களின் அதிகாரப் பகிர்வு குறித்து மனம் திறந்து பேசினோம். அதிகாரப் பகிர்வு என்பது தொகுதிகளின் கோரிக்கை மட்டுமே. அதேசமயம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதல்முறை முன்வைத்ததே நாங்கள் தான் என்று பதிலளித்தார்.
மேலும் பேசுகையில், இன்றைய பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பில் எங்களிடம் கருத்துகளை கேட்டுக் கொண்டார்கள். தலைவர் உடன் விவாதித்து விட்டு மீண்டும் அழைப்பதாக கூறினர். எந்தெந்த தொகுதிகள் என்று எதுவும் பேசவில்லை. எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும். எங்கள் பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பதை தெளிவாக கூறியிருக்கிறோம். ராஜ்ய சபா சீட் பற்றி பேசவில்லை.
புதுச்சேரியில் 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என மொத்தம் 3 தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டுள்ளோம். முதலில் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிவு செய்த பின்னர் தான், எந்தெந்த பகுதிகளில் இடம் வேண்டும் என்பது பேசி முடிவு செய்யப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.