MRTS 
தமிழ் நாடு

சென்னையின் 18 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்தது- வேளச்சேரி- பரங்கிமலை இரயில்!

Staff Writer

தலைநகர் சென்னையின் 18 ஆண்டுகாலக் குறை ஒருவழியாகத் தீர்ந்து, இன்று வேளச்சேரி- பரங்கிமலை இடையே உயர்மட்டப் பறக்கும் இரயில் சேவை தொடங்கியது. 

தாம்பரம் முதல் கிண்டிவரையிலான ஜிஎஸ்டி சாலைக்கும் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையிலான இந்த இணைப்புச் சேவையால், தென்சென்னை புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயனடைவார்கள்.

குறிப்பாக, திருவான்மியூர், அடையார், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐடி தொழிற்பேட்டைகள், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளை இந்த இரயில் சேவை மூலம் புறநகர் பகுதி பயணிகள் எளிதில் சென்றடைய முடியும்.

இதுவரை, கிண்டிவரை மின்சாரத் தொடர்வண்டியில் வந்துசெல்லும் தென்சென்னைப் புறநகர் மக்கள், அங்கிருந்து பேருந்து, ஆட்டோகளில்தான் இப்பகுதிகளுக்குச் செல்லமுடியும். இதனால் நெரிசல், நேர விரயம் ஆகியவற்றை அவர்கள் எதிர்கொண்டுவந்தனர். இனி அந்த அவதி இருக்காது என இரயில்வே துறையினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

நீட்டிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதியையும் சேர்த்து, அன்றாடம் பரங்கிமலை - கடற்கரை இடையே 86 நடைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப இரயில் சேவையைக் கூட்டவேண்டும் என பயணியர் தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.