திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
திமுக பெரியண்ணன் மனநிலையில் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் “2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் இடம்பெற்று மதசார்பற்ற சக்திகளோடு கூட்டணியில் பயணித்து வந்தோம்.
சமூக நீதிக்கு எதிரான சக்திகளை திமுக உடன் வைத்துள்ளது. திமுக பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்கிறது. மக்களை சுரண்டும் திட்டங்களுக்கு மத்திய அரசோடு இணைந்து மாநில அரசும் அனுமதி வழங்கியது. தமிழர்களுக்கு பாடுபட்ட போராடிய தமிழர்களின் பெயரை தெருக்களுக்கு வைக்காமல், நடிகர் கேட்டார் என அவரது அப்பாவின் பெயர் சாலைக்கு வைக்கப்படுகிறது.
நாங்கள் வைத்த எந்த கோரிக்கைகளையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுக எங்களை புறக்கணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற தமிழர் அல்லாத அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர். அதிகாரிகளின் பேச்சை கேட்டு தவாகவை திமுக புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழர் அல்லாத அதிகாரிகளின் ஆட்சிதான் நடக்கிறது.
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது. இடங்களுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை. எங்களது 10 கோரிக்கைகளே முக்கியம். நான் வைத்துள்ள 10 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் பேசி வருகிறோம். ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுகிறது.” என்றார்.