பாதுகாப்பு பணியில் தன்னார்வலர்கள் 
தமிழ் நாடு

விஜய் மக்கள் சந்திப்பு: யாருக்கெல்லாம் அனுமதி, எவ்வளவு பேருக்கு அனுமதி?

Staff Writer

தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அனுமதி பெற்றுள்ளவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இதற்கு பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் சுமார் 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் தவெக தலைவர் விஜய்யிடம் தங்களது கோரிக்கைகளையும், குறைகளையும் எடுத்துரைப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்று விஜய் ஆறுதல் கூறிய நிலையில் வரும் டிசம்பர் நான்காம் தேதி பரப்புரை பயணத்தை சேலத்தில் தொடங்க முடிவு செய்தார்.

ஆனால் தீபத் திருவிழா உள்ளிட்ட காரணங்களால் காவல்துறை பரப்புரை தேதியை மாற்றுமாறும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் சென்னைக்கு அடுத்த சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இன்று 11 மணி அளவில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த உள்ளார். இதனால், கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்புக்காக தன்னார்வளர்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.