த.வெ.க. தலைவர் விஜய் இன்று நெல்லையில் பிரச்சாரம் செய்வதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“ இன்று புதன்கிழமை திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நண்பகல் 01.00 மணி முதல் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.” என்றும்,
அதன்பின்னர், ”தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C.நகர் வழியாக, தூத்துக்குடி செல்கிறார்.” என்றும் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மாலை 3 மணி முதல் விஜய், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி ( Road Show) நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
”இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் விஜய்யின் பிரச்சார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உட்பட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது. தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றவேண்டும்.
மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.” என்றும் ஆனந்த் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.