புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் சாலை வலம் மேற்கொள்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியுடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீண்டும் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு, தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அரசியல் கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் காஞ்சிபுரத்தில் கல்லூரி ஒன்றில் உள்ளரங்கு கூட்டம் நடத்தி மக்கள் சந்திப்பை நடத்தினார். சேலத்தில் விஜய் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு அனுமதி வழங்க புதுச்சேரி காவல்துறை மறுத்துவிட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதால் சாலை வலம் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அதே நேரத்தில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று மீண்டும் புதுச்சேரி முதல்வரைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ஆனந்திடம், புதுச்சேரியில் ரோட்ஷோவா? பொதுக்கூட்டமா? என்று செய்தியாளர்கள் கேட்க, அவர் பதிலளிக்காமல் சென்றார்.