வீடியோவில் வைரலான பெண் வினோஷா - அமைச்சர் கீர்த்தனா 
தமிழ் நாடு

‘அது நான் தான்!... அமைச்சர் கீர்த்தனா இல்லை!’ வைரல் வீடியோ பற்றி விளக்கம் அளித்த மலேசிய பெண்!

Staff Writer

அண்மையில், காரில் இருந்து இறங்கும் ஒரு பெண் வீடியோவை வெளியிட்டு அது அமைச்சர் கீர்த்தனாதான் என்று அவரின் உடை உட்பட்டவைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் சிலர் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இதுதொடர்பாக, அமைச்சர் கீர்த்தனா , "அந்த வீடியோவில் வரும் பெண், நான் இல்லை. அப்படி, அது நானாகவே இருந்திருந்தாலும், அதில் என்ன இருக்கிறது? ஒரு பெண்ணின் உடை, தோற்றம் ஆகியவை இன்றும் ஏன் பொதுவெளியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன?" என்று தன் சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைதொடர்ந்து, அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது தான் தான் என்று மலேசியப் பெண் வினோஷா ரவி என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"என்னுடைய பெயர் வினோஷா. கடந்த இரண்டு நாள்களாக சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோவால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

அந்த வீடியோவில் என்ன தப்பாக இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. சாதாரணமாக காரில் இருந்து இறங்கி, நான் வேலைக்குச் செல்லும் வீடியோவை பதிவிட்டு இந்தியாவில் இருக்கும் ஒரு அமைச்சருடன் ஒப்பிட்டு போட்டுள்ளார்கள்.

ஒரு அமைச்சர் இந்த மாதிரியான ஆடை அணியலாமா என்று கேட்டிருக்கிறார்கள். முதலில், அந்த வீடியோவில் இருப்பது நான். அது அந்த அமைச்சர் கிடையாது.

அந்த வீடியோவிற்கு பிறகு எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி. ஆனால், பலர் எனது ஆடை குறித்து அவதூறாக கமெண்ட் செய்கிறார்கள்.

அப்படி நான் என்ன உடை அணிந்துவிட்டேன்?

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அதற்கு தகுந்த உடையை தான் அணிந்துள்ளேன்.

இதனால் நான் ஒன்றும் உடைந்துபோகவில்லை. அமைதியான முறையில் நலமாகி வருகிறேன்.

தயவுசெய்து இந்த வீடியோவை பகிருவதை நிறுத்துங்கள். மலேசிய காவல் துறையிடம் நான் புகார் அளித்துள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." என்று கூறி உள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram