ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ், தடகளப் போட்டியில் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்து வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
முதலில் 4 x 400மீ. கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றிருந்தார் வித்யா. கடைசியாகப் பங்கேற்று ஓடிய அவரது புயல்வேகத்தால், பின் தங்கியிருந்த இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
இதற்கு நான்கு நாள்கள் கழித்து வித்யா 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் களமிறங்கினார். இதை 54.75 விநாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதை சாதாரணமாக சொல்லமுடியாது. இதன்மூலம், 42 ஆண்டுகளுக்கு முன்பு பி.டி.உஷா நட த்திய வரலாற்றுச் சாதனையை வித்யா ராமராஜ் முறியடித்து சாதனைப் படைத்தார். ஆம். 55.42 நொடிகளில் இந்த தூரத்தை பிடி உஷா கடந்திருந்தார். இப்போது வித்யா அந்த அரியணையில்.
அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனைகள் கிரண் பஹல், மச்செட்டிரா பூவம்மா, பிராச்சி, ஆகியோருடன் வித்யாவும் ஓடினார். இந்த அணி இத்தூரத்தை 3:29:69 என்ற கால அளவில் ஓடிக் கடந்தனர். தங்கப்பதக்கம் கிட்டியது. இந்திய அணிக்குக் கிடைத்த முதல் தடகள தங்கம்!
வித்யா பெற்றிருப்பது மூன்று பதக்கங்கள். ஒரு தேசிய சாதனையும் 54.75 விநாடிகளில் கடந்த 400 மீ தடை தாண்டும் ஓட்டம்.
லாரி டிரைவரின் மகளான வித்யா கோவையைச் சேர்ந்தவர். ஒரு சமயத்தில் வித்யாவுக்கு ஆதரவளிக்கும் பொருளாதார பலம் அவரது குடும்பத்துக்கு இல்லாமல் இருந்தது. வித்யாவுக்கு ஒரு இரட்டை சகோதரி உண்டு. அவர் பெயர் நித்யா. அவருமே ஒரு விளையாட்டு வீராங்கனைதான். இவர்களது தந்தை கூடுதல் நேரமாக லாரி ஓட்டி சம்பாதிக்க வேண்டி இருந்தது.
இளமையில் அவர்களின் திறமையைக் கண்டு உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவரால் ஈரோடு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் சேர்க்கப்பட்டனர். இது பெரிய உதவியாக இருந்தது.
2018 -இல் தேசிய அளவில் தேர்வான வித்யா ஹரியானாவில் தேசிய முகாமில் பயிற்சிக்குப் போனார். ஆனால் அவருக்கு அங்கு சூழல் சரியாக இல்லை. பின்னர் கொரானா காலம். வித்யாவுக்கு அப்பண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை. பின்னர் தனியார் பயிற்சியாளருடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். ஆனால் இதற்கு பெரும் செலவு.
இந்நிலையில் சகோதரி நித்யா கைகொடுத்தார். அவருக்கு வருமான வரித்துறையில் வேலை கிடைத்திருந்த து. பின்னர் வித்யாவுக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தபின்னர் எல்லாம் சரியாயின.
தன் தந்தையை லாரி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி வீட்டில் ஓய்வு எடுக்க வைத்தனர் இந்த இரு சகோதரிகளும்.
வித்யா 2023 ஆசியப் போட்டியில் பிடி உஷாவின் சாதனையை எட்டினார். ஆனால் முறியடிக்கவில்லை. எல்லோரும் எப்போது அதை உடைக்கப்போகிறாய் எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
2026-இல் கடைசியாக வித்யா அந்த சாதனையை நிகழ்த்திவிட்டார்.
மகள்களுக்காக கனவுகளைச் சுமந்த லாரி டிரைவருக்கு இதைவிட என்ன வேண்டும்?