சமக தொண்டர் இளஞ்செழியன்
சமக தொண்டர் இளஞ்செழியன் 
தமிழ் நாடு

’என்னாது பா.ஜ.க.வோட கட்சிய இணைக்கிறீங்களா…’- சரத் கட்சித் தொண்டர் ஆவேசம்!

Staff Writer

சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க.வில் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ச.ம.க. தொண்டர் ஒருவர் பேசிய காணொலி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள ச.ம.க. அலுவலகத்தில் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ச.ம.க. தொண்டர் இளஞ்செழியன் என்பவர், திடீரென சத்தமிட்டபடி எழுந்து, "என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க.. பா.ஜ.க.வில் கட்சியை இணைப்பதற்கா இத்தனை ஆண்டுகள் நாங்கள் களத்தில் உழைச்சோம்? இப்படி ஏமாத்திட்டீங்களே எங்களை! இனி இந்தக் கட்சித் துண்டு எதுக்குடா..? நீங்களே வெச்சிக்கோங்க. இனிமேல் இந்தக் கட்சித் துண்டை யார் போட்டுக்குவா?." என ஆக்ரோஷமாகப் பேசினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற தொண்டர்கள், அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த இளஞ்செழியன், ”நாங்க பா.ஜ.க.வுக்கு வேலை பார்க்கமாட்டோம்… எங்களுக்கு பா.ஜ.க. வேண்டாம். கட்சி வேட்டியை மடித்துவைத்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவோம். துண்டை அவிழ்த்து வைத்துக் கொள்வோம். பா.ஜ.க.வுக்கு யாரும் போகவில்லை. எங்களுக்கு எங்க தலைவர்தான் பிடிக்கும். ஆனால் பா.ஜ.க.வைப் பிடிக்காது.” என்று ஆவேசமாகக் கூறினார்.