"இனி இந்தி அதிகம் பயன்படுத்த வேண்டும்" என தெற்கு ரெயில்வே உத்தரவு பிறப்பித்து இருப்பது விவாத்தை கிளப்பியுள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை உள்ளடங்கிய தெற்கு ரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வேயின் கீழ், 90,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தி பேசுபவர்கள். இதனால், டிக்கெட் கவுன்டர்களில், சிலர் இந்தியில் மட்டுமே பேசுவதால், தமிழக பயணியர் டிக்கெட் எடுப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனர். சில இடங்களில் வாக்கு வாதமும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயின் அலுவலகப் பணிகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென தெற்கு ரெயில்வே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது, சிறு, சிறு குறிப்புகள் கூட இந்தியில் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே, அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “அலுவலகப் பணிகளில் இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க செப்டம்பர் 19ஆம் தேதி வரை சிறப்பு முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும். கடித பரிமாற்றங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும். துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களில் இந்தி பயன்பாடு குறித்து ஆய்வு செய்து அறிகுறித்து இந்தி துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், ”தெற்கு ரயில்வே அறிவிப்புகள், ஒப்புதல், ஏற்பு, அனுமதி, முன் முடிவு உள்ளிட்ட வார்த்தைகள் இந்தியில் குறிப்பிட வேண்டும், பெரும்பாலானோர் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பதை உறுதி செய்வது அவசியமாகும்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.