முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

புயலை எதிர்கொள்ள என்னென்ன ஏற்பாடுகள்...?

Staff Writer

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டித்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கு 430 கிலோமீட்டர், சென்னைக்கு தென்கிழக்கு 530 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து வருகிறது. நவம்பர் 30 தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆந்திர கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று புதுச்சேரி தஞ்சாவூர் நாகை திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிக கன மழைகான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 29, 30 ஆகிய தேதிகளில் தெற்கு பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் காணொளி வாயிலாக தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுள்ளோம்.

நேற்றைய தினமே இது குறித்து எனது தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இடங்களை உஷாராக கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். சென்னையிலும் அதிக கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் உள்ள இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மீட்பு குழுக்களை அனுப்பி உள்ளோம்.

தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களை தண்ணீர் திறக்கக்கூடிய நேரங்களில் உடனடியாக அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் மழைக்கான பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

அப்போது டெல்டா மாவட்ட பகுதி மக்களை தமிழக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”அவர் வஞ்சிக்காமல் இருந்தால் போதும் அதுதான் முக்கியம். அவர் அப்படி சொல்லிக் கொண்டுதான் இருப்பார். அது போல் எதுவும் கிடையாது. அவர் எப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.” என்றவர் புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.