செல்வப்பெருந்தகை 
தமிழ் நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை பதில்!

Staff Writer

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய செல்வப்பெருந்தகை,

"முதல்வர் ஸ்டாலினை ப. சிதம்பரம் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. திமுகவுடன் நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். பேசி முடித்ததும் உங்களுக்குச் சொல்வோம்.

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. கூட்டணியில் எந்த முறிவும் இல்லை. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை." என்று தெரிவித்தார்.