ஐ.ஜி. அஸ்ரா கர்க் 
தமிழ் நாடு

வட மாநில இளைஞர் தாக்குதலில் நடந்தது என்ன? - ஐ.ஜி. விளக்கம்

Staff Writer

வட மாநிலத்தவர் என்பதால் அவர் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறுவது தவறு என வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் கூறியுள்ளார்.

ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, திருத்தணி ரயில் நிலையம் அருகே அரிவாளால் சிறார்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறார்கள் போதையில் அந்த இளைஞரை பட்டா கத்தி கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவையும் அந்த சிறார்கள் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த விடியோவும் சமூக ஊடகங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் செய்தியாளர்களுடன் பேசுகையில், "கடந்த டிச. 27 ஆம் தேதி திருத்தணியில் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் திருத்தணி ரயிலில் பயணிக்கும்போது, அதே ரயில் சுமார் 17 வயதுள்ள 4 சிறுவர்கள் பயணிக்கின்றனர்.

ரயிலில் வைத்தே ஒடிசா இளைஞரைத் தாக்கும் அந்த சிறுவர்கள், அவரை கட்டாயப்படுத்தி இறக்கி அழைத்துச் சென்று பட்டா கத்தி கொண்டு தாக்கியுள்ளனர். அந்த வீடியோவையும் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதுதான் நடந்தது.

ஒடிசா இளைஞர் தமிழ்நாட்டில் 2 மாதமாக இருந்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் திருவள்ளூர் மருத்துவமனை, பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவரின் புகாருக்கு ஏற்ப, 4 சிறுவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான நால்வரில் மூவர் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். சிறார் நீதிக் குழு அறிவுறுத்தலின்படி ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்ததாகக் கூறுவது தவறானது. சிறார்கள் ரயிலில் ரீல்ஸ் எடுக்கும்போது இளைஞர் முறைத்துப் பார்த்ததாகக் கூறி தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது. அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார்.

இதுபோன்ற ரீல்ஸ்கள் சமூக ஊடகங்களில் கண்காணிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இளைஞரைத் தாக்கிய சிறுவர்கள் போதைப்பொருள் எடுத்திருந்தார்களா என்பது குறித்த ஆதாரங்கள் எங்களிடம் தெளிவாக இல்லை. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுவர்கள் அந்த கத்தியை வீட்டில் இருந்ததாகக் கூறியுள்ளனர். அவர்கள் மீது பெரிய வழக்குகள் எதுவும் இல்லை.

பாதிக்கப்பட்ட இளைஞர் ஊருக்குச் செல்வதாகக் கூறி சென்றுவிட்டார். ஆதாரத்திற்கு அவரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். ரயில்வே போலீஸும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையைப் பொருத்தவரை திருவள்ளூரில் கடந்த 4- 5 மாதத்தில் 500 கிராம் மெத்தபெட்டமைன், சுமார் 6,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் சுமார் 500 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.