அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் தான் விஜயின் பிரச்சாரம் நடைபெற்றது என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பினர் வாதத்தை முன்வைத்தனர்.
கரூரில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு மற்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரியது உட்பட ஐந்து மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
தவெக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம் மற்றும் அரியமா சுந்தரம் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
அவர்களின் வாதத்தில், "பிரச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டே பிரச்சாரம் நடந்தது. இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் விஜய் அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பியதாக அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அது முற்றிலும் தவறானது. காவல் துறை அதிகாரிகள்தான் விஜய்யை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இவர் எப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார், தலைமை பண்பில்லாதவர் என்றெல்லாம் உயர்நீதிமன்றத்தின் விமர்சனங்களை முன் வைத்தது ஏற்க முடியாதது என வாதத்தை முன் வைத்தனர்.
அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் விசாரணை வரம்பிற்குட்பட்டது. அப்படியிருக்கையில் சென்னையில் இருக்கக்கூடிய பிரதான கிளையில் எப்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்பதை விளக்குங்கள்" என்றனர்.
இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், "விசாரணை வரம்புக்குள் வராத ஒரு வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியுடைய அனுமதி பெற்றே விசாரணைக்கு எடுக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் பெறப்பட்டதாக தகவல் இல்லை" என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், "சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் விஜய் அல்லது தவெக எதிர்மனுதாரராக உள்ளனரா?" என கேட்டனர். அதற்கு விஜயோ அல்லது அவரது கட்சியோ எதிர்மனுதாரராக இல்லை என பதில் அளித்தது.
மேலும் இளைஞர்கள் நாமக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது விபத்து ஏற்பட்டதாக சில வீடியோ காட்சிகள் இருந்த போதிலும் அது தொடர்பாக எந்த வழக்கும் இல்லாத நிலையில் அந்த வீடியோ காட்சிகளை வைத்து விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்றம் கருத்துகளை தெரிவித்திருந்தது என தவெக தரப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் "விஜய் கரூருக்கு தாமதமாக வந்ததே காரணம். மேலும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை அவர் போய் பார்க்கவில்லை" என தமிழக அரசு வழக்கறிஞர் வில்சன் முறையிட்ட போது குறுக்கிட்ட நீதிபதி, "விஜய் கரூருக்கு போனாரா இல்லையா என்பது இந்த வழக்கிற்கு தொடர்பில்லாதது.
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வழக்கு உள்ளபோது மற்ற மனுக்களில் உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.